வருடம் 2320. இன்னும் மூன்று மணி நேரத்தில் அந்த பெரிய விண்கலம் கிளம்பிவிடும். இதே போல் ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஒரு விண்கலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லா விண்கலமும் ஒரே நேரத்தில் கிளம்பும் வகையில் நிரல் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு விண்கலமும் பதினோராயிரம் பேர் தங்க கூடிய வசதி கொண்டது. தற்சமயம் பூமியில் ஒவ்வொரு நகரத்திலும் சுமார் பதினைந்தாயிரம் பேர்தான் வாழ்கின்றனர். அனைவரையும் கூட்டி செல்ல முடியாது. கிட்டத்தட்ட மூன்று வருட பயண கால முடிவில் மற்றொரு கேலக்ஸியில் உள்ள இவான் கிரகத்தை அடையும். அங்கு இந்த மனிதர்கள் மறு வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்றே இந்த விண்கலத்தில் ஏற்றப்பட்டு விட்டது. இந்த விண்கலத்தை விட்டு விட்டால் பூமியிலேயே இருக்க வேண்டியதுதான்.
பூமி மனிதர்கள் வாழும் தன்மையை இழந்திருந்தது.
உணவு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை, காற்று மாசு, வித விதமான நோய்கள். அதனால் தான் ஒவ்வொரு நகரத்திலும் பதினோராயிரம்
பேரே வாழ்கின்றனர். இது போதாதென்று இன்னும் இரு நாட்களில் ஒரு இமயமலை அளவு பெரிய விண்கல்
பூமியை தாக்கவிருக்கிறது. கிட்டத்தட்ட பூமியே இந்த சூரிய குடும்பத்தில் இல்லாது
போய் விடும் அளவுக்கு சக்தி வாய்ந்த விண்கல் தாக்குதலாக இருக்குமென விஞ்ஞானிகள்
கணித்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த அவசர புறப்பாடு.
வேறு கிரகத்திற்கு செல்வதால் பூமியில் அவரவர்
சொத்து மதிப்பு கணக்கிட்டு அதற்கேற்ப இவானிஷ் நாணயம் வழங்கப்பட்டிருந்தது.
பூமியில் நிலவும் பொருளாதார ஏற்ற தாழ்வை புது கிரகத்தில் அப்படியே நிறுவ
செய்யப்பட்ட அற்பமான ஏற்பாடு இந்த இவானிஷ் நாணயம். புது கிரகத்தில் இவானிஷ் நாணயம்
மட்டுமே செல்லுபடியாகும்.
கடவுள் அருளில் எனது நகரத்தில் இருந்து
புறப்படும் அந்த விண்கலத்தில் ஆறு டிக்கெட் கிடைத்து விட்டது. எதன் அடிப்படையில் டிக்கெட் கொடுக்கப்
படுகிறது என்று எவருக்கும் தெரியாது. இட ஒதுக்கீடு அடிப்படையா இல்லை திறமை
அடிப்படையா இல்லை குலுக்கல் முறையா ஒன்றும் தெரியாது. எது எப்படியோ எனக்கு ஆறு
டிக்கெட் கிடைத்து விட்டது. வீட்டில் நான், மனைவி, இரு குழந்தைகள். மீதமுள்ள இரு டிக்கெட்டுகளில்
ஒன்று அம்மாவுக்கு மற்றொன்று மாமியாருக்கு. ஒரு டிக்கெட் குறைவாக கிடைத்திருந்தாலும்
மிகப்பெரிய சிக்கல் இருந்திருக்கும். நல்லவேளை என்று மகிழ்ந்து கொண்டே வீட்டுக்கு ஆறு
டிக்கெட்டுகளை கொண்டு சென்றால் அங்கு மனைவி
ஒரு குண்டை தூக்கி போட்டார்: “ஏங்க.. அங்க போனா சமைக்கிறதுக்கு ஆள்
கிடைக்காதுங்க.. நம்ம சமையல்கார பாட்டியையும் கூட்டிட்டு போய்டலாம்”
அதிர்ச்சியில் சில கணம் பேசவில்லை. பதில் தெரிந்தே
கேட்கும் கேள்விதான் ஆனாலும் கேட்டேன்: “அவரை கூட்டிட்டு போவது எனக்கு
பிரச்சினை இல்ல. ஆனா இருப்பது ஆறே டிக்கெட்.. நாம ஆறு பேருக்கு சரியா இருக்கு..
எப்படி அவங்களை கூட்டிட்டு போறது”
எந்தவித அதிர்ச்சியும் இன்றி எதிர்பார்த்த
மாதிரியே பதிலளித்தாள் : “எங்க உன்ன அம்மாவுக்கு வயசாவுது.. புது கிரகம்
ஒத்துக்குமோ இல்லையோ.. தேவை இல்லாம ஒரு டிக்கெட் வேஸ்ட் பண்ணாதீங்க.. எங்க அம்மா வந்தாளாச்சும்
நம்ம பிள்ளைகளை பாத்துக்கும்.. உங்க அம்மாவுக்கு உடம்பு வேற முடியல.”
அயர்ந்தேன். சண்டை போட ஆரம்பித்தால் மூன்று மணி
நேரம் முடிந்து விடும். ஒருவரும் விண்கலத்தில் ஏற முடியாது. சில நிமிடங்கள் யோசித்து,
“சரி வரட்டும்” என்று தீர்க்கமாக சொன்னேன். மனைவி மகிழ்ச்சியுடன் “அப்பா..
இப்பத்தான் நான் சொல்றதை கேட்க ஆரம்பிசிருக்கிறீங்க.. புது கிரகத்தில சண்டை இல்லாத
புது வாழ்க்கை தொடங்கலாம்” என்றாள். நானும் புன்னகைத்து கொண்டே “கண்டிப்பாக
அங்கே நமக்குள் சண்டை வர வாய்ப்பே இல்லை” என்றேன்.
மாமியார் மற்றும் வேலைக்கார பாட்டி இருவரும் மாமியார்
தங்கியுருந்த உயர்ரக முதியோர் இல்லத்தில் இருந்தே தனியாக ஒரு ஏர் டாக்சியில் விண்கலம்
சென்று விடுவர். அவர்கள் இருவருக்கான டிக்கெட்டுக்களை வேலைக்கார பாட்டியிடம் ஏற்கனவே
கொடுத்தனிப்பிவிட்டேன்.
நாங்கள் செல்ல வேண்டிய ஏர் டாக்சி இன்னும் இரண்டு
மணி நேரத்தில் வந்து விடும். அது விண்கலம் போய் சேர சரியாக ஒரு மணி நேரம் ஆகும். ஏர்
டாக்சி வருவதற்குள் வீட்டில் உள்ள மிக
அத்தியாயிசமானவற்றை பெட்டியில் நிரப்ப வேண்டும். ஒருவருக்கு இரு பெட்டிகள். மொத்தம்
எட்டு பெட்டிகள். ஏகப்பட்ட “ஏங்க’ வினாக்களை காதில் வாங்கியவாறே வீட்டுக்கு
தேவையானவற்றை எடுத்து வைத்தேன்.
“ஏங்க உங்களுக்கு ஒரு பெட்டி போதும்.. நான் ஒரு
பெட்டி எடுத்துக்கவா.. சுடி நிறைய இருக்கு.. ரெண்டு பெட்டி பத்தலை.”
“ஏங்க ஒரு எட்டு சென்னை சில்க்ஸ் போயிட்டு
வந்துடுங்களேன்.. பூ போட்ட துண்டு ரெண்டு தான் இருக்கு.. ஒரு நாலாச்சும் வேணும்..”
“:ஏங்க.. இவானிஷ் நாணயம் எல்லாம் பத்திரமா என்
பெட்டியில வைச்சிறவா... நீங்க பராக்கு பாத்துட்டு நிக்கும்போது தொலைஞ்சிரும்.. “
“ஏங்க... ஏர் டாக்சி டவேரா மாடல்ல வேணும்னு
சொல்லுங்க.. சின்ன கார் ஒத்துக்காது..”
‘ஏங்க... குளிக்க வெண்ணி வைக்க விண்கலத்தில அடுப்பு
இருக்குமா.. பச்சை தண்ணி எனக்கு சேராதுங்க..“
சரியாக ஒரு மணிநேரத்தில் ஏர் டாக்சி வந்து சேர்ந்தது. அந்த நடுத்தர வயது டிரைவர் ஒரு முகமதியர் என்பதை ஆடை தொப்பி வைத்து கண்டு கொண்டேன். ‘சலாம் அலைக்கும்’ என்று நான் சொன்னதை ஆச்சர்யத்துடன் பார்த்து ‘அலைக்கும் சலாம்’ என்றார். ஒரு வழியாக விண்கலம் செல்லும் ஏர் டாக்சியில் எல்லோரும் ஏறி விட்டோம்.
ஏர் டாக்சி ஜன்னல் வழியாக மனைவி வேடிக்கை
பார்க்க ஆரம்பித்திருந்தாள். நான் மெதுவாக டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன். அவரது குடும்பத்திற்கும்
டிக்கெட் கிடைத்திருந்தது. எங்களை இறக்கி விடும் இதுவே அவரது கடைசி ட்ரிப். அவரும்
விண்கலத்தில் ஏற இருக்கிறார். சில நிமிட பேச்சிலேயே அவர் ஒரு நாணயமான மனிதர் என்பது
தெரிய வந்தது.
விண்கலம் நினைத்ததை விட பெரிதாகவே இருந்தது.
அதன் முகப்பில் ஏர் டாக்சி நின்றவுடன் டிரைவர் அனைத்து பெட்டியையும் வெளியே இறக்கி
ட்ராலியில் வைக்க உதவினார். சிறிது தூரம் தள்ளி ஒரு பெஞ்சில் சில மணி நேரம் முன்பே
வந்து அமர்ந்திருந்த மாமியாரும் வேலைக்கார பாட்டியும் எங்களை கண்டதும் மெதுவாக
வந்து சேர்ந்து கொண்டனர். உள்ளே செயற்கை ஆக்சிஜன் மற்றும் புவியீர்ப்பு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்ததால் எந்தவித விசேச உடையும் தேவை இல்லை. டிக்கெட் பரிசோதனை
செய்யும் இடத்தில ஆண் / பெண் தனி கியூ இருந்தது. பெண்கள் கியூவிற்கு அனைவரையும்
கூட்டி செல்ல சொல்லி மனைவியிடம் அனைத்து டிக்கெட்களையும் கொடுத்து போக சொன்னேன். நான்
மெதுவாக நகர்ந்து டிரைவரிடம் ஒரு கவரை கொடுத்தேன். அவர், மிக பணிவாக ‘நான்
டிப்ஸ் வாங்குவதில்லை’ என்றார். நான், ‘அதை நானும் உங்களுடன் பேசும் போதே
புரிந்து கொண்டேன். இது வேறொரு விஷயம். உள்ளே போய் பிரித்து பாருங்கள்”
என்றபடி, விண்கலத்திற்கு வெளியே நோக்கி செல்லும் பாதையில் நடந்தேன். விண்கலத்தின் கதவு
மூடும் சத்தம் மெதுவாக கேட்டது.
(முற்றும்)
பின்குறிப்பு: கதை எனது பார்வையில் செல்வதால்,
விண்கலம் உள்ளே நடந்ததை என்னால் சொல்ல முடியாது. முடிவு தெரிந்தே ஆக வேண்டும்
என்பவர்கள் சிறுகதை விதியை மீறி செல்லும் டிரைவரின் பார்வையை படிக்கலாம்.
மெதுவாக ஏர் டாக்சியை விண்கலம் உள்ளே பார்க்
செய்து விட்டு, எனது டிக்கெட்டை எடுத்து கொண்டு ஆண் வரிசையில் சென்றேன். எனது
கையில் ஒரு கவர் கொடுத்து விட்டு அந்த பயணி வெளியே நோக்கி செல்லவதை என்னால் பார்க்க
முடிந்ததே தவிர கேட்கவோ தடுக்கவோ முடியவில்லை. விண்கலம் கதவு இன்னும் சில நிமிடங்களில் மூடி விடும். டிக்கெட்
செக்கிங் முடித்து கொண்டு உள்ளே விண்கலத்தில் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு
சென்றேன். அந்த கவரை மெதுவாக பிரித்தேன். உள்ளே ஆயிரம் இவானிஷ் நாணயமும் ஒரு சிறு
குறிப்பும் இருந்தது.
“உள்ளே எனக்கான டிக்கெட்டில் எனது அம்மாவை ஏற்றி விட்டேன். அவரது விபரம் பின்னால் கொடுத்துள்ளேன். பார்த்து கொள்ளவும்.”

Comments