நாராயண் அனுப்பிய அவசர குறுஞ்செய்தி பார்த்ததும் மேல் தளத்தில் இருந்த ஆய்வு கூடத்திற்கு விரைந்தார் விண்வெளி மைய இயக்குனர் பாரி ராகவன். உலகம் வாழ முடியாத அளவுக்கு குப்பை மேடாய் போனதால் மாற்று கிரகம் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல வருடங்களாய் நாராயண் ஈடுபட்டுள்ளார். பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டும் எங்குமே காற்று இல்லாததால் அவை புறக்கணிக்கப்பட்டுவிட்டது.
நாராயண் டெலஸ்கோப்பில் எதையோ
பார்த்துக்கொண்டிருந்தார். பாரியை பார்த்ததும் “சார்.. ஒரு நல்ல செய்தி.. ஒரு
கெட்ட செய்தி..” என்றார். “நல்ல செய்தி முதலில்..” என்ற பாரியை பார்த்து
சிரித்தபடி “காற்று இருக்கும் புதிய கிரகம் ஒன்று எனது டெலஸ்கோப்பில் சிக்கி
விட்டது”. பாரி முதலில் புன்னகைத்தாலும் கெட்ட செய்தி என்னவாவிருக்கும் என்று
யோசிக்கலானார். “சார்.. கெட்ட செய்தி என்னவென்றால் அந்த கிரகம் நம் கிரகத்தைவிட
குப்பை மேடாக இருக்கிறது.”. பெருமூச்சு விட்டபடியே “விதி” என்று பொத்தாம் பொதுவாக
வானத்தை பார்த்து சொல்லிபடியே “அதற்கு நீங்களே
ஒரு புதிய பெயரும் வைத்து விடுங்கள்” என்றார். “சார் அதற்கு அவசியமில்லை..
அங்கு ஏற்கனவே உள்ளவர்கள் அனுப்பிய சிக்னல்களை ஒரு வழியாக படிக்க முடிகிறது.
அவர்கள் அதற்கு வைத்திருக்கும் பெயரையே நாமும் உபயோகித்து கொள்ளுவோம்”. பாரி “என்ன
பெயர்?” என சுவாரஸ்யமாய் கேட்டார். நாராயண் டெலஸ்கோப்பில் அதை பார்த்தவாறே சொன்னார்:
“பூமி”
Comments