Skip to main content

வெறுமை சூழ் உலகு

“முருகேசா... இந்த ஊராவது எனக்கு செட்டாகுமா?” – இருபத்தியேழாவது முறையாக இந்தக் கேள்வியை முருகேசனிடம் கேட்டேன். அவனும் ஒவ்வொரு முறையும் சளைக்காமல் பதில் சொன்னான். ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு முறையில். “சார்.. இந்த ஊர் எல்லைல ஒரு கம்மா அது பக்கத்துல ஒரு சின்ன சுடல கோவில் இருக்கு.. சாயங்காலம் போயி உட்கார ரம்மியமா இருக்கும். உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றான். முருகேசன் எனக்கு டிரைவராக வந்து வருடம் பத்து ஆகிறது. அவனுக்கு குடும்பம் என்று ஒன்று இல்லை. நானும் ஏறக்குறைய அவனை போலத்தான், பல வருடமாய் என் வீட்டில் சமையல், பெருக்குவது, அயன் பண்ணுவது, கடைக்கு போவது, சிறு தோட்ட வேலை சகலமும் அவனே.

இதோடு எத்தனை ஊர் மாறியிருப்பேன் என்று கணக்கேயில்லை. ஊர் மாறியபின் சில மாதம் நன்றாய் போகும். பின் எல்லாமே போலியாய் இருப்பதாய் ஒரு தோற்றம். உடன் ஊர் மாற்றும் படலம். ஒரு ஊர் மாறியபின் இந்த முருகேசன் சுடல கோவில் போல சில ரம்மியமான இடங்களை கண்டுபிடித்து வைத்திருப்பான். டீ ப்ளாஸ்க் உடன் போய் உட்கார்ந்தால் நேரம் போவதே தெரியாது. போரடித்தால் முருகேசனிடம் எதாவது கேள்வி கேட்டு நேரம் போக்கலாம்.

சற்று ஊருக்கு ஒதுக்குபுறமாக அதே சமயம் சில வீடுகள் சுற்றி இருக்கும்படி தனி வீடு அமர்த்தியிருந்தேன். முன்னால் ஒரு பெரிய தாழ்வாரம். அதில் முருகேசன் தங்கி கொள்வான். ஒரு பட்டாளை. பின் ஒரு ஹால். பெட்ரூம் என்று நாமே சொல்லி கொள்ளலாம். கொல்லைப்புறமும் ஒரு குறுந்தோட்டமும், அகலமான மூடப்பட்ட கிணறும் இருந்தது.

மூன்று மாதம் போனதே தெரியவில்லை. சுடல கோவில், ஊரு சாவடி, நாற்புற சாலையில் அமைந்திருக்கும் டீக்கடை, இலுப்பை மரம் சூழ்ந்திருக்கும் தம்புராட்டி கோவில், சிறு குன்று என்று அனைத்து இடங்களிலும் ஆசை தீர அமர்ந்து பொழுது போக்கியாகிவிட்டது. பல முகங்கள் இப்போது பழகிய முகங்களாய் தெரிய தொடங்கியிருந்தது. பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் சீனி கடன் கேட்டு வரும் அளவுக்கு இன்னும் பழகவில்லையே தவிர, பின்னால் வளர்ந்திருந்த முருங்கையில் காய் வேண்டுமளவுக்கு பழக்கம் இருந்தது.

மறுபடி அதே வெறுமை இருள் மனதுள் சூழ தொடங்கிற்று. ஏன் சூழ்கிறது என்று புலப்படவில்லை. முருகேசனிடம் எதாவது பேசலாம். மன இறுக்கம் குறையும். மெதுவாக தாழ்வாரம் வந்தேன். முருகேசன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான். ஏதோ உள்ளுணர்வு உந்த சடாலென்று எழுந்த கொண்டவன், என்னை அங்கு ஆச்சரியமாக பார்த்தான். வெளியே தூக்கம் வராத பக்கத்துக்கு வீட்டு பெரியவர் தாழ்வாரத்தை மெதுவாக எட்டி பார்த்து, பின் எதோ முனகிவிட்டு சென்றார். முருகேசன், “என்ன சார் தூங்கலியா?” என்றான் கொட்டாவி விட்டவாறே. மெதுவாக தரையில் அமர்ந்தவாறே கேட்டேன், “வேற ஊர் போலாமா முருகேசா?”

பின் குறிப்பு: கதைப்படி பெரியவர் முனகியது நாயகனுக்கு கேட்கவில்லை. கதையானது நாயகனின் பார்வையில் விரிவதால் உங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் கதைசொல்லி விதிமுறையை மீறி உங்களுக்கு அதை சொல்ல ஆசை படுகிறான். வெளியே தூக்கம் வராத பக்கத்து வீட்டு பெரியவர் தாழ்வாரத்தை மெதுவாக எட்டி பார்த்து, “அடிக்கடி தனக்குத் தானே பேசுறாரு... என்ன பிரச்சினையோ” என்று முனகியபடி சென்றார். 

 

 

Comments

Popular posts from this blog

ஒரு டோக்கன் வேணும்

அவர்  எப்பொழுது என்னருகில் வந்தார் என்று கவனிக்கவில்லை. நான் அவரை எதேச்சையாக கழுத்தை திருப்பி பார்க்கும் பொழுது அதற்காகவே காத்திருந்தவர் போல ‘ ஒரு டோக்கன் வேணும் ’ என்று சொன்னார். அதை.கிரகிக்கவே எனக்கு சில வினாடிகள் ஆனது . அது கொஞ்சம் பிரபலமான மதுரையில் இருந்த ஒரு டீக்கடை.    நான் ஏற்கனவே ஒரு டீயை குடித்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக ‘ டீ வேண்டும் ’ என்றோ    அல்லது ‘ பணம் வேண்டும் ’  என்றோ   எப்போதேனும் ஒருவர் கேட்பார் . ஆனால் இவர் கேட்பது   ‘ ஒரு டோக்கன் வேணும் ’ என்று. அருகிலிருக்கும் மிக தெரிந்தவரிடம் கேட்பது போல் கேட்கிறார். ‘ டீ வேண்டும் ’ என்று சொல்வதே உணவு வேண்டும் என்று யாசிப்பதை போல  என்று நினைத்திருக்கலாம் . பணம் வேண்டும் என்று சொல்வதும் இழுக்கு என்று நினைத்திருக்கலாம். நான் எதுவும் பேசவில்லை. எனது டீயை குடித்து முடிக்கும் முன்னே கல்லாவிலிருந்த ஆளிடம் காசு கொடுத்து ஒரு டீ டோக்கன் வாங்கி அவரிடம் தந்தேன். டீ எடுத்துக் கொண்டு வந்த அவரிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். அவர் வேறு ஏதோ ஒரு ஊரில் ...

டீ பார்ட்டி

 1990ஸ் ல ஸ்கூல் படிக்கும் போது, ஒவ்வொரு வருட கோடை விடுமுறை ஆரம்பிக்கும் போது,  ஒரே ஸ்கூல்ல படிக்கிற நண்பர்கள் பதினைஞ்சு, இருபது பேரு சேர்ந்து காசு கலெக்ட் பண்ணி டீ பார்ட்டி  வைக்கிறது வழக்கம். பொதுவா கடைசி பரிட்சை சமூகவியல் நடக்கிற அன்னிக்கு சாயங்காலம் நடக்கும்.. சில சமயம் அதுக்கு மறுநாள் கூட வைப்போம்.  அதுல மொத முடிவு பண்ற விஷயம்.. யார் வீட்ல வைக்கிறதுன்னு.. எங்க குரூப்ல ரமேஷ் ன்னு ஒருத்தன் வீட்ல நல்ல பெரிய மொட்டை மாடி இருக்கும்.. அவங்க அப்பா அம்மா கொஞ்சம் ஜோவியல் டைப்.. ரொம்ப ஸ்ட்ரிக்ட் கிடையாது..  அதனால அவங்க வீட்ல எங்க குரூப் வைக்கும்.. நாங்க எல்லோரும் அதே ஊர்ல இருக்கிற நாடார் ஸ்கூல் ல ஒம்போதாப்பு படிச்சுக்கிட்டு இருந்தோம்.   அம்பது ல இருந்து நூறு ரூபா வரைக்கும் ஒவ்வொருத்தர்ட்டயும் கலெக்ட் பண்ணுவோம்.   பேரு தான் டீ பார்ட்டி ஆனா வெறும் டீ மட்டும் இல்ல.. நடக்கிற அன்னிக்கு காலையில இருந்தே பார்ட்டி ஏற்பாடுகள் பண்ண ஆரம்பிச்சிவோம்.. ஒரு நோட்டு வாங்கி கலக்ஷன் டீடெயில்ஸ், செலவு டீடெயில்ஸ் எழுதி வைப்போம்.. மூணு பேரா பிரிஞ்சி ஆளுக்கு ஒரு வேலை...

இவான்

  வருடம்  2320 . இன்னும் மூன்று மணி நேரத்தில் அந்த பெரிய விண்கலம் கிளம்பிவிடும். இதே போல் ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஒரு விண்கலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லா விண்கலமும் ஒரே நேரத்தில் கிளம்பும் வகையில் நிரல் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு விண்கலமும் பதினோராயிரம் பேர் தங்க கூடிய வசதி கொண்டது. தற்சமயம் பூமியில்  ஒவ்வொரு நகரத்திலும் சுமார் பதினைந்தாயிரம் பேர்தான் வாழ்கின்றனர். அனைவரையும் கூட்டி செல்ல முடியாது. கிட்டத்தட்ட மூன்று வருட பயண கால முடிவில் மற்றொரு கேலக்ஸியில் உள்ள இவான் கிரகத்தை அடையும். அங்கு இந்த மனிதர்கள் மறு வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து பொருட்களும் நேற்றே இந்த விண்கலத்தில் ஏற்றப்பட்டு விட்டது. இந்த விண்கலத்தை விட்டு விட்டால் பூமியிலேயே இருக்க வேண்டியதுதான். பூமி மனிதர்கள் வாழும் தன்மையை இழந்திருந்தது. உணவு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை, காற்று மாசு, வித விதமான நோய்கள் . அதனால் தான் ஒவ்வொரு நகரத்திலும் பதினோராயிரம் பேரே வாழ்கின்றனர். இது போதாதென்று இன்னும் இரு நாட்களில் ஒரு இமயமலை அளவு பெரிய விண்கல் பூமியை தாக்கவிருக்கிறது. கிட்டத்தட்ட பூமி...