பூமியில் கிட்டத்தட்ட எல்லா எல்லா உயிரினங்களும் அழிந்து போய், பூமியை கிட்டத்தட்ட 90% கதிரியக்கம் மூடிய நிலையில், எப்படியோ இருக்கும் அறிவை வைத்து குரோமியம் பூசப்பட்ட பங்கரில் குடும்பத்தை பாதுகாப்பாய் வைத்து விட்டேன். கணினி அறிவும் உண்டென்பதால், நாசாவின் நெட்வொர்க்கில் எப்படியோ நுழைந்து அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்ததால் தப்பித்தாயிற்று. ஆனால் காலையில் நாசா கணினியில் அறிந்த அந்த பேராபத்து செய்தி தூக்கி வாரி போட்டது. இன்னும் இருபது நிமிடங்களில் கதிரியக்கத்தின் அழுத்தம் தாளாமல் பூமி வெடித்து சிதற ஆரம்பிக்க போகிறது. இன்னும் பல மடங்கு வேகமாக நாசா கணினியை நோண்டியதில், அது நூற்றுக்கணக்கான எஸ்கேப் பாட் செய்து அதில் பல முக்கியமான நபர்கள் பூமியை விட்டு தப்பிய செய்தி கிடைத்தது. அதோடு அதில் சில பாட், கணினி ப்ரோக்ராம் குறைபாட்டால் பழுதடைந்து, இன்னும் இங்கேயே இருக்கிறது என்ற இனிப்பான செய்தியும் கிடைத்தது.
குஷியாக ஒரு காபி அறிந்தியவாறே, அந்த பாட்களின் கணினி பழுதை சில நிமிடங்களில் இங்கிருந்தே சரி செய்தேன். அதன் ஆட்டோமாடிக் சிஸ்டத்தை உயிர்பெற செய்து, இங்கு வரவழைக்க ஆணை கொடுத்தேன். இன்னும் பத்து நிமிடங்களில் வந்து விடும். உடனடியாக மனைவிடம் மிக சுருக்கமாக விவரத்தை சொல்லி விட்டு, கிளம்ப சொன்னேன். பத்து நிமிடங்கள் எப்படி போதும் குறைந்தது மூன்று மணி நேரம் வேண்டும் துணிமணிகள் எடுத்து வைக்க என்ற மனைவியிடம், மல்லுகட்டி எப்படியோ ஏழு நிமிடத்தில் குறைந்த பட்ச பொருட்களை மட்டும் பேக் செய்து எல்லோரையும் கிளப்பி பங்கர் மேலே நின்றிருந்த எஸ்கேப் பாட் டில் ஏற்றினேன்.
இன்னும் மூன்று நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் எஸ்கேப் பாடை கிளப்பும் பட்டனை அமுக்கும் முன் மனைவி, "ஏங்க ஹேண்ட் வாஷ் எடுத்து வைச்சீங்களா.. புது கிரகம் எப்படி இருக்குமோ?" என்றாள்.
"டெட்டால் ஹேண்ட் வாஷ் எடுத்து வைத்து விட்டேன்.." என்று சொல்லி பாடை கிளப்ப முயன்றேன்.
"ஏங்க உங்களை லைப் பாய் ஹேண்ட் வாஷ் தானே எடுத்து வைக்க சொன்னேன்.. டெட்டால்ஹேண்ட் வாஷ் மருந்து வாசனை வருமே" என்றாள்.
பாடை விட்டு வெளியே வந்து பங்கரில் புகுந்து வேகமாக லைப் பாய் ஹேண்ட் வாஷ்ஷை எடுத்து வெளியே வர முயற்சிக்கும் போது பூமி வெடிக்க ஆரம்பித்திருந்தது.
Comments